நீச்சல் பழகாதவன்
காலடி மணல் அரிப்பெடுத்து
என் பயணம் நீரோடானது முதல் எழும்புதலில்
அவளை முதன்முறை
பார்த்த முகத்தை
உள் விழுங்கினேன்
இரண்டாம் பயணம்
சற்றே ஆழமானதானது
மீண்டும் மேலெழும்பினேன்
இம்முறை அவளோடிருந்த
நாட்களும் நினைவுகளும்
என்னுள் இறங்கியது
மேலும் நெடிதான பயணம்
அடியிலுருந்து மேலெழுந்தேன்
கடைசியாக அவளின் அன்பு
என்னுள் தானே இறங்கியது
கடைசி பயணம் சலனமற்று
ஆற்றின் கீழே முடிந்தது
உடலை தேடியெடுத்து
கரையில் போட்டவன் பகன்றது
நீச்சல் பழகாதவன் ஏன்
ஆற்றில் இறங்க வேண்டும் என்பதே